தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Sonntag, 16. Oktober 2016

கேதார கௌரி விரதப் பாடல்



தேவி துணை
ஓம் சக்தி
காப்பு
முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு
என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்
சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்
எக்குற்றமும் வாராமற்கா.
வேண்டுதற் கூறு
காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே
காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே
காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்
எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்

பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய்
உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக
என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்
காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்

காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய்
சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே
அரியை உடையவளே அம்மா காளிதாயே
கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே

அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே
சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய்
பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய்
அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய்

சங்கரனை எண்ணீயல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய்
ஐங்கரனைப் பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய்
விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும்
அம்மா உமை அணைத்தே அருள்மாரி பொளிந்தானே

வகையாற்றுப் படலமிதை வழிவழியாக் காட்டிடுவீர்
நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிவிடு
காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு
நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு

வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு
காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே
காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே
நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா

வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா
நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா
அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா
பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா

பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே
நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா
கல்வி சிறப்பதற்குத் கலைமகளே வாருமம்மா
செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா

வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா
பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே!
ஏட்டுடைத் தேவியரே எல்லாம்மிகு வல்லபையே
காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா

பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள்
நானுமக்குத் தாறேனம்மா நயந்து எம்மைக் காருமம்மா
காளிமகா தேவியரே காசினிக்கு வித்தவளே
வித்தை விதைப்பவளே வினையாவும் காப்பவளே

எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே
காசினியில் வேற்றுமையை கணப்பொழுதே மாற்றிவிட்டால்
ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏத்துபுகழ் தேவியளே
காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும்

ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும்
தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்
இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும்
நம்பி அணிவோர்க்கு நல்லதெல்லாம் பெருகிவரும்

நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும்
சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே
குங்குமப் பூச்சுவளே குலக்கொழுந்தே கௌரியம்மா
காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று

ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன்
நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில்
பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன்
காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்

ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன்
காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன்
ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன்
தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே

காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி
சொல்லற்கு அரிதான சோதிமிகு காப்பதனை
இருபது நாள்வரையில் இசைவோடு தவமிருந்து
பக்தி மனதுடனே பரவி அணிவோர்க்கு

சித்தியெல்லாந்தருவாள் சீர்பெருகு கௌரியவள்
முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு
எச்சகத்தில் உள்ளோர் எல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர்
சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே

அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள்
கௌரிக் காப்பதனைக் காலம் தவறாமல்
முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர
ஞானம் ஓங்கிவர நல்லறிவு துலங்கிவர

தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே
காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பருளும்.
திருச்சிற்றம்பலம்

கேதாரகௌரி விரதம்



சிவனின் அருள்பெற கேதாரம் என்ற இமயமலையை சார்ந்த வயல் பகுதியில் 21 நாட்கள் விரதம் இருந்தாள் அம்பிகை. அதன் பலனாக ஈஸ்வரனின் உடம்பில் சரிபாதி இடத்தை அம்பிகை பெற்றுக்கொண்டார். கணவனிடம் எந்நாளும் பிரிக்கமுடியாத பந்தம் வேண்டி கௌரியை வழிபடும் விரதம் கேதார கௌரி விரதம் ஆகும். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார். 

கைலாய மலையிலே மகாவிஷ்ணு, பிரம்மா, தேவர்கள், முனிவர்கள் சூழ உள்ள சபையில்  சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருந்தார். பிருங்கி முனிவரின் விகட நடனத்தைக் கண்டுகளித்து சிவனும் அனைவரும்  முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் வண்டு உருவம் எடுத்து சிவனை மட்டும் வலம்வந்து வணங்கி நின்றார். பார்வதியை வலம்வராததால் கோபமுற்ற பார்வதி தேவி, தனது சக்தியால் பிருங்கி முனிவரை முடமாக்கினார். அதனால் நிற்கமுடியாத நிலையில் இருந்த  பிருங்கி முனிவருக்கு சிவன்  ஊன்றுகோலை வழங்கி உதவினார். அதனைப் பெற்ற பிருங்கிமுனிவர் மீண்டும் சிவனை வணங்கி அவ்விடம் விட்டு சென்றார்.
இதனால் கோபமடைந்த பார்வதி கைலையமலையை விட்டுத் கௌத முனிவரின் ஆசிரமத்திற்கு சென்றார். அதனால் வறட்சியில் இருந்த அப்பகுதி செழிப்பு அடைந்தது. செழிப்பின் காரணம் அறிந்த கௌத முனிவர் தனது ஆசிரமத்துக்கு வந்த பார்வதியை வரவேற்று, வந்த காரணம் அறிந்து, முனிவர் கேதாஈஸ்வர விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைக்குக் கூறியருளினார். முனிவரின் கூறியதுபோல் அம்பிகையும் 21 நாட்களும் கடும் தவம் இருந்து சிவனை நினைத்து தவம் இருந்தாள்.
பார்வதி தேவியின் கடும் தவத்தால் சிவபெருமான் உமையவளுக்கு தரிசனம் தந்தார். இறைவனைக் கண்ட பார்வதி, சிவன் உடலில் சரிபாதி பிரியாத வரம் வேண்டி சிவனோடு இணைந்தார். இந்நாளை  கேதார கௌரி விரதம் ஆக அனுஷ்டிக்கப்படுகின்றது.
புரட்டாதி மாதம் சுக்கில பக்ஷ அஷ்டமி முதல்  21நாட்கள் ஐப்பசி அமாவாசையுடன் நிறைவுறும் விரதம் ஆகும். 21 நாளும்  21 முடிச்சுகளை கொண்ட நூலினை பூஜையில் வைத்து, இறுதிநாள் ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டி கொள்வார்கள். உபவாசம் இருந்து விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

Sonntag, 2. Oktober 2016

நவராத்திரி



உலக வாழ்வில் இன்றியமையாமைப் புலப்படுத்தும் தெய்கவீ வழிபாடுகளில் சக்தி வழிபாடும் ஒன்றாகும்.இது முப்பெரும்தேவிகளை வழிபடுவதன் ஊடாக வாழ்வில் நற்பண்புகளை வளர்க்க உதவுகின்றது.
சைவசமயத்தவகளால் அனுஷ்டிக்கப்படுகின்ற மிக முக்கிய விரதங்களின் ஒன்றான நவராத்திரி விரதம் அனைவராலும்கொண்டாடப்படுகின்றது. புரட்டாசி மாதத்தின் வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி  இந்த விரதம் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.  நவராத்தியின் ஒன்பது நாட்களும் முப்பெரும்தேவிகளின் வழிபாடாக விஷேட வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துர்கையையும்,அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி இலக்குமியையும், அடுத்த மூன்று நாட்களும் கல்வியை வேண்டி சரஸ்வதிதேவியையும் வழிபாடு செய்வார்கள். 9ம் நாளன மஹாநவமி அன்று சரஸ்வதிபூஜை ,கலைமகள்பூஜை,ஆயுதபூஜை என்று வழிபாடு செய்வார்கள்.அன்றையதினம் புத்தகங்கள், கலை-இசைக் கருவிகள், ஆயுதங்கள் வைத்து வழிபாடு செய்வார்கள். இவ் விரதகாலத்தில்  பிரதமையில் கும்பம் வைத்து பூஜையை தொடங்குவர்.வீடுகளிலும், ஆலயங்களிலும் கொலு வைத்து அலங்காரம் செய்து பூஜையை சிறப்பிப்பார்கள்.தேவியரின் தோத்திரங்கள் பாராயணம் செய்து மேலும் சிறப்பாக வழிபடுவார்கள்.
வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்த குழந்தைகளை கம்சன் என்ற அசுரன் கொன்றான்.கண்ணனுக்கு முன்பு பிறந்த குழந்தையான அம்பிகையை அசுரன்  தூக்கியபோது அம்பிகையானவள் அவன் கையில் இருந்து மறைந்தாள். அசுரனை வெல்வதற்காக அம்பிகையான துர்கை  9 நாட்கள்  விரதமிருந்தாள். அதனையே நவராத்திரி என்றும்,9 ம் நாள் ஆயுதபூஜை செய்ததால் ஆயுதபூஜை  என்றும்,பத்தாம் நாள் அசுரனை ஜெயித்து உலகத்துக்கு  நன்மை செய்ததால்
  10–வது நாளான தசமி அன்று விஜயதசமி விழாவாக கொண்டாடப்படுகின்றது. 

 மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார். அதனால் விஜயதசமி வெற்றிக்குரிய நாளாக கருதப்படுகின்றது.அன்று ஏடு தொடக்குதல்,புதிய கலை ஆரம்பித்தல், அதன்பின் கும்பம் சரித்தல் இடம்பெறும். ஆலயங்களில் சூரசங்காரம், மானம்பூ திருவிழா, வாழை வெட்டு போன்றன இடம்பெறும்.
நவராத்திரி விரதத்தை மேற்கொள்வதால் இலட்சுமி கடாட்சம் பெருகும்.கல்வி செல்வம் பெருகும்.மனம் தூய்மை அடையும்.
                                        பூத்தவளே புவனம் பதின்நான்கையும் காப்பாள்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                        

Freitag, 16. September 2016

புரட்டாதிச் சனி







சைவசமயத்தில் பிறந்த அனைவருக்கும் சோதிடம் எனும் கலை இன்றியமையாத நம்பிக்கை வழிகாட்டியாக கணிக்கப்படுகிறது. அதில் நவக்கிரகங்களின் பலனை வைத்தே கணிப்பீடு செய்கிறார்கள். ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை. அவை ராகு,கேது,சனி ஆகும். இவைகளில் சனி என்ற சனீஸ்வர பகவான்தான் முதன்மையானது. சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர்.  அதிலும் சனீஸ்வரன் மீதே அதிக வழிபாடு உண்டு. ஏழரைச்சனி, அட்டமத்துசனி, ஜென்மத்துசனி, சனி பார்வை என்பன உள்ள காலங்களில் ஆலயம் சென்று சனிஸ்வரனுக்கு விசேட வழிபாடு செய்வார்கள்.
பன்னிரு மாதங்களில் கன்னி மாதமான புரட்டாதி மாதமே சனிஸ்வர வழிபாடு ஆர்வமாக நடைபெறும்.ஒவ்வொரு சனிக்கிழமையும் நல்லெண்ணெய் வைத்து அரப்பு,எலுமிச்சம்பழம் வைத்து நீராடி கோவிலுக்கு சென்று சனிஸ்வரன் சந்நிதியில் எள் எண்ணெய் விளக்கு ஏற்றிச் வழிபாடு செய்வார்கள். கறுப்பு நிறத்துணி,நீலநிறப் பூக்களால் அருச்சனை செய்து சனிதோஷம் நீக்கி நல்வாழ்வு தரும்படி வேண்டுவார்கள். காகத்தை வரவழைத்து அதற்கு உணவு வழங்கி,காகம் உணவு உண்டபின்னே உணவு உண்டு விரதத்தை பூர்த்தி செய்வார்கள். புரட்டாதி மாதம் வருகின்ற எல்லா சனிக்கிழமையும் விரதம் சனீஸ்வரனுக்காக மேற்கொள்வார்கள்.
சனி மூல மந்திரம்:
"ஓம் ஐம் கிலீம்  ஸ்ரீம் சனீஸ்வராய நமஹ",  
சனி காயத்ரி மந்திரம்:
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்|| 
  சனி ஸ்தோத்திரம்:
நீலாஞ்ஜன ஸமாபாஸம் 
ரவிபுத்ரம் யமாக்ரஜம்! 
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் 
தம் நமாமி சனைச்சரம்!!
  தமிழில்: 
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

Dienstag, 30. August 2016

ஆவணி விநாயகர் சதுர்த்தி

விநாயக சதுர்த்தி என்பது விநாயகப்பெருமானின் முக்கியமான விழாவாகும்.


 விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. விநாயகரை வழிபாடு செய்தபின்னே எப் பணியையும் செய்வதென்பது சைவசமயத்தவரின் மரபாகும்.இது சிவன் மகனுக்கு கொடுத்த கொடையாக கருதப்படுகின்றது. அந்த வகையில் நாம் நம்பிக்கை வைத்து தும்பிக்கையானை முதலில் வழிபாடு செய்கின்றோம். 


ஆவணி சதுர்த்தி கொண்டாடுவதற்கு வேறு கதையும் கூறுவார்கள்.

ஒருமுறை விநாயகப் பெருமான் கைலை மலையில் நடனம் ஆடினார்.அதனை சந்திரன் பார்த்து சிரிக்க விநாயகப் பெருமானுக்கு கோபம் வந்தது.அதனால் சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.பெரியோர் முன்னிலையில் என்னைப் பார்த்து சிரித்து பரிகாசம் செய்த உனது ஒளி உலகில் பரவாது இருக்க கடவது என சபித்தார்.அதற்கு சாபநீக்கம் வேண்டும் என எல்லோரும் வேண்டியதால் விநாயகர் ஆவணி சதுர்த்தி அன்று சந்திரனைப் பாராமல் தம்மை சிறப்பாக பூஜிப்பவர்கள் தம் அருளை பூரணமாகப் பெற்றுக்கொள்ளலாம்.மற்றைய தினங்களில் சந்திரனின் ஒளியை எல்லோரும் அனுபவிக்கலாம் என கூறி அருளினார்.


சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!


மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா! 
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே 
சங்கரனார் தருமதலாய் சங்கடத்தைச் சம்கரிக்கும் 
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே! 
  நாமும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்வோம்!வரசித்தி அருளைப் பெறுவோம்!இந்துவாக வாழ்வோம்!சைவனாக வளர்வோம்!




Montag, 1. August 2016

ஆடிப்பூரம்

 
ஆடிப்பூரம்
சைவ சமயத்தினரின் வழிபாடுகளில் ஆடிமாதம் அம்பிகையை வழிபட உகந்த காலமாகும். அம்பிகை மீது பற்றுக் கொண்டவர்கள் ஆடிப்பூரம் நிகழ்வை ஆடிமாதத்தில் சிறப்பான வழிபாடாக கொண்டாடி மகிழ்வார்கள். ஆடிமாதத்தில் பூர நட்சத்திரம் உள்ள காலத்தில் ஆடிப்பூர விழாவைக் கொண்டாடுவார்கள். இந்நாளில் அம்பிகையும், ஆண்டாளும் அவதரித்த நாளாகக் கருதப்படுகின்றது. அகிலத்தில் உள்ள உயிர்களை எல்லாம் காத்து அருள்புரியும் பராசக்தியான அம்பிகையின் மீது  நம்பிக்கை கொண்டுள்ள பக்தர்கள், அம்பிகையை சிறப்பாக அலங்காரம் செய்து கொண்டடுவார்கள். அம்பிகையின் மனம் குளிர வளையல்கள் போட்டு வளைகாப்பு செய்து ருது  சாந்தி உற்சவமகவும் கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்தியாவில் வில்லிப்புத்தூர் கிராமத்தில் ஆழ்வார்களில் மூத்த பெரியாழ்வார் குழந்தைப் பாக்கியம் வேண்டி பெருமாள் அரங்க நாதனை வழிபட்டதன் பலனாக, ஆடிப்பூர நன்னாளில் பூமாதேவி குழந்தையாக துளசி மாடத்தில் அவதரித்தார். அந்தக் குழந்தையை அணைத்த பெரியாழ்வார் கோதை எனப் பெயர் சூட்டி கண்ணன் பெருமைகளைப் சொல்லி வளர்த்தார். கோதையும் கண்ணன் மீது பற்றுள்ளம் கொண்டு வளர்ந்து வந்தாள். பெருமாளுக்கு அணிவிக்கும் முன் மாலைகளை கோதை தான் அணிந்து அழகு பார்த்து விட்டு கழற்றி வைத்து விடுவாள். அதையே பெரியாழ்வார் பெருமாளுக்கு அணிவிப்பார். பெருமாளுக்கு உரிய மாலை கோதை சூடி அழகு பார்த்ததை பெரியாழ்வார் பார்த்து கோதையை கண்டித்து, அதன் பின் புதிய மாலை தொடுத்து பெருமாளுக்கு அணிவித்தார். அந்த மாலை அறுந்து விழுந்தது.
கோதை தான் அணிந்த மாலையை கொடுத்து அணிவிக்குமாறு சொன்னாள். அந்த மாலையை பெரியாழ்வார் அணிவித்த போது மாலையை பெருமாள் ஏற்றுக் கொண்டார். அதனாலேயே கோதை சூடிக்கொடுத்த சுடர் கொடியாள் என அழைக்கப்பட்டாள்.
கண்ணன் மீது பற்றுக் கொண்ட பருவ வயதை அடைந்த கோதை பெருமாள் மீது காதல் கொண்டு, அவரையே மணப்பதாக உறுதி கொண்டாள். ஒரு நாள் பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய  ஸ்ரீரங்கப்பெருமாள், கோதையை  ஸ்ரீரங்கம்  அழைத்து வருமாறு அருளினார். அதன்படி கோதையுடன் பெரியாழ்வார் ஸ்ரீரங்கம் சென்றார். கோதை ஸ்ரீரங்கத்தில் மறைத்து விட்டாள்.
பெரியாழ்வார் கோதையை தேடியும் கிடைக்காததால் பெருமாளிடம் முறையிட்டார். உமது மகளை ஆண்டாள் ஆக ஏற்றுக் கொண்டோம் என்ற அசரீதியுடன் பெருமாள் ஆண்டாளுடன் காட்சி கொடுத்தார். இந்நிகழ்வு பங்குனி உத்தரத்தில் நிகழ்ந்தது. வில்லிப்புத்தூர் பெருமாள் வைத்து ஆண்டாளை மணந்தார் என இந்நாளில் கொண்டாடுவார்கள்.
சூடிக்கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நன்நாளில் பெருமாள் ஆலயங்களில் ஆண்டாளுக்கு வளையல்கள் அணிந்து வளைகாப்பு செய்து ருது  சாந்தி உற்சவமகவும் அடியவர்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.
ஆடிப்பூர நன்நாளில் அம்பிகை, ஆண்டாள் மீது பற்றுக் கொண்டு வழிபடும் போது திருமணத் தடைகளில் இருந்து நீங்கி பெண்களுக்கு திருமணம் நடைபெற்று வாழ்வில் சகல சுப நிகழ்வுகள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


ஆடி அமாவாசை


சூரியனும் சந்திரனும் ஒரே இராசியில் வரும் நாள் அமாவாசை என்பர். ஆடி மாதத்தில் வரும் ஆடிஅமாவாசை சைவசமயத்தவர்களின் விசேட நாளாகும். இந்த ஆடி அமாவாசை நாள் தந்தையை இழந்தவர்களால் விரதமிருந்து நினைவு கூரப்படுகின்றது. இத் தினத்தில் விரதமிருந்து ஆலயம் சென்று சிவனை வணங்கி மோட்ச அருட்சனை செய்து வழிபாடு செய்வது சைவசமயத்தவர்களின் நம்பிக்கைவழி வழக்கமாகும்.