தைப்பூசம்
பூசம்
என்பது பஞ்சாங்கம் குறிப்பிடும் 27 நட்சத்திரங்களுள் எட்டாவதாகும். தை மாதத்தில் வரும் பூசம் என்பதால் தைப்பூசம் என
வழங்கப்படுகின்றது. இந்நாளினை இந்துக்கள் புண்ணிய நாளாக போற்றுகின்றனர். தைப்பூசம்
என்கின்ற இந்நாள் பெரும்பாலும் பௌர்ணமியுடன் கூடிய நாளாக இருக்கும். தேவர்களின்
குருவான பிரகஸ்பதி பூச நட்சத்திரத்தின் தேவதை. அவர் அறிவின் தேவதையாகவும்
இருப்பதனால் தைப்பூச தினத்தில் விரதமிருந்து அவரை வணங்கினால் அருள் கிடக்கும்
என்பர். மேலும் இத் தினம் சிவசக்தி ஐக்கியத்தைக் காட்டும் திருநாள் ஆகவும்,
முருகப்பெருமானுக்கு உரிய விஷேட விழா நாளாகவும் கொண்டாடப்படுகின்றது. தைப்
பூசத்திருநாள் உலக சிருஷ்டியின் ஆரம்பநாள் எனவும், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவரும் காணும்படி நடராஜப்பெருமான் சிவதாண்டவம் ஆடிய நாளாகவும், வாயு, வருணன்,
அக்கினி, ஆகிய தேவர்களும் சிவபெருமானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும்
குறிப்பிடுவர். தைப்பூச தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் நீங்கி நற்பயன் கிடைக்கும் என்பர்.
தைப்பூச
நாளினை விசேட நாளாகக் கொண்டு ஏடு தொடக்கல், புதிதுண்ணல், பெண் குழந்தைகளுக்கு காது
குத்துதல், மூக்கு குத்துதல் முதலான நற் செயல்களை மேற்கொள்வார்கள்.
பூம்பாவாய்! மைபூசிய ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ?
மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான் நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும் தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய். |
-------திருஞானசம்பந்தர் தேவாரம்
Keine Kommentare:
Kommentar veröffentlichen