தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Samstag, 14. Januar 2017

அம்மா அம்மா தாயே

அம்மா அம்மா தாயே அகிலாண்டேஸ்வரி நீயே !
அன்னபூர்ணிஸ்வரி தாயே, ஓ ஓ ஆதி பராசக்தி நீயே !
இம்மாநிலத்தில் எல்லாம் .......அம்மா
நடக்குதம்மா உந்தன் ஆடலினால் !
அம்மா அம்மா தாயே அகிலாண்டேஸ்வரி நீயே !
அன்னபூர்ணிஸ்வரி தாயே, ஓ ஓ 
ஆதி பராசக்தி நீயே !
ரட்சிக்க வேண்டும் அம்மா,  அம்மம்மா !
ரட்சிக்க வேண்டும் அம்மா,  அம்மம்மா !
குச்சியில் சுமக்காமல் கோடி லட்சம் உயிர்கள் ஈன்றாய் !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா ! 
பட்சிவாஹனனின் சோதரி சௌந்தரி !
பட்சமுடன் உன்னை பாடிடுவேன், 
பரிபூரணி காரணி நாரணி நீயே !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா ! 
லட்சியம் எனக்கு நீயே அம்மா,  அம்மம்மா,  அலட்சியம் செய்திடாதே 
லலிதேஸ்வரி தாயே , புவனேஸ்வரி நீயே !
கச்சி கட்டி என்னை நீ...... நீ நீ நீ நீ , 
கச்சி கட்டி என்னை நீ, 
கவலை படுத்த எண்ணினால்,
காத்திடுவார் யாரோ அம்மா அம்மம்மா,  அம்மா அம்மா!
காத்திடுவார் யாரோ,  காமாட்சி மீனாட்சி நீ சாட்சி !
ரட்சிக்க வேண்டும் அம்மா,  அம்மம்மா !
ரட்சிக்க வேண்டும் அம்மா,  அம்மம்மா !

Donnerstag, 12. Januar 2017

தைப்பூசம்


தைப்பூசம்
பூசம் என்பது பஞ்சாங்கம் குறிப்பிடும் 27 நட்சத்திரங்களுள் எட்டாவதாகும். தை  மாதத்தில் வரும் பூசம் என்பதால் தைப்பூசம் என வழங்கப்படுகின்றது. இந்நாளினை இந்துக்கள் புண்ணிய நாளாக போற்றுகின்றனர். தைப்பூசம் என்கின்ற இந்நாள் பெரும்பாலும் பௌர்ணமியுடன் கூடிய நாளாக இருக்கும். தேவர்களின் குருவான பிரகஸ்பதி பூச நட்சத்திரத்தின் தேவதை. அவர் அறிவின் தேவதையாகவும் இருப்பதனால் தைப்பூச தினத்தில் விரதமிருந்து அவரை வணங்கினால் அருள் கிடக்கும் என்பர். மேலும் இத் தினம் சிவசக்தி ஐக்கியத்தைக் காட்டும் திருநாள் ஆகவும், முருகப்பெருமானுக்கு உரிய விஷேட விழா நாளாகவும் கொண்டாடப்படுகின்றது. தைப் பூசத்திருநாள் உலக சிருஷ்டியின் ஆரம்பநாள் எனவும், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவரும் காணும்படி நடராஜப்பெருமான் சிவதாண்டவம் ஆடிய நாளாகவும், வாயு, வருணன், அக்கினி, ஆகிய தேவர்களும் சிவபெருமானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் குறிப்பிடுவர். தைப்பூச தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் நீங்கி  நற்பயன் கிடைக்கும் என்பர்.
தைப்பூச நாளினை விசேட நாளாகக் கொண்டு ஏடு தொடக்கல், புதிதுண்ணல், பெண் குழந்தைகளுக்கு காது குத்துதல், மூக்கு குத்துதல் முதலான நற் செயல்களை மேற்கொள்வார்கள்.


மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.
 
பூம்பாவாய்! மைபூசிய ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ?

                                                                                -------திருஞானசம்பந்தர் தேவாரம்


தைப் பொங்கல்

தைப்பொங்கல்
தை மாதம் முதல் ஆனிமாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி செல்கின்ற காலப்பகுதி உத்தராயணம் எனப்படும். உத்தராயணத்தின் தொடக்க நாளான தை முதலாம்திகதி அன்று தைப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. உணவு உற்பத்திக்கும், உயிரினங்கள் வாழ்விற்கும் தேவையான வெளிச்சம், வெப்பம் என்பவற்றை சூரியன் வழங்குகின்றான். ஆதலால் நெல் அறுவடையானதும் வீட்டு முற்றத்தில் புத்தரிசியில் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைத்து நன்றிக்கடன் எம் முன்னோர்கள் செலுத்தி வந்தனர். இதனால் தைப்பொங்கல் திருநாள் உழவர் திருநாள் என்றும் கூறப்படுகின்றது. தைப்பொங்கல் மறுநாள் பட்டிப் பொங்கல் இடம்பெறும். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால் நடைகளை போற்றும் விழாவாக இது அமைகிறது.
சைவ மக்கள் மரபுவழி விழுமியங்களான அறம், அன்பு, அகிம்சை, நன்றி உணர்வு, பகிர்ந்து உண்ணல் ஆகிய பண்புகளை தைப்பொங்கல் பண்டிகை மூலம் வளர்த்துக் கொள்கின்றனர்.





Freitag, 6. Januar 2017

திருவெம்பாவை



                             
                                     திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
   


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே
ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.  - 1


பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.  - 2


முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன்ஆ னந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.  - 3


ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.  - 4

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்
றோலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.   - 5


மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.   - 6


அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.  - 7





கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.  - 8

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.   - 9

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.  - 10

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.   - 11

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.  - 12

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.  - 13

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.   - 14

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். - 15

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.  - 16

செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.  - 17

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.   - 18

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.  - 19


போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய். - 20


திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
 



Dienstag, 20. Dezember 2016

பிள்ளையார் கதை பாடல் 3

யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ.வரதபண்டிதர் அவர்கள் இயற்றிய
பிள்ளையார் கதை 3     610 - 745

பவுரிகொள் கூத்துடைப் பரமனும் நோற்றுக்     610
கவுரிஅன்று அடைத்த கபாடந் திறந்ததும்
வாசமென் குழலுடை மாதுமை நோற்பத் 
தேசம் போகிய செவ்வேள் வந்ததும்
வானவர் நோற்று வரங்கள் பெற்றதும் 
நாரத முனிவன் நவின்றிடக் கேட்டே 
இந்நிலந் தன்னில் இவ்விர தத்தை 
மன்னவன் வச்சிர மாலிமுன் நோற்றுக் 
காயத் தெழுந்த கடும்பிணி தீர்த்து 
மாயிரும் புவியின் மன்னனாய் வாழ்ந்து 620 

தடமுலைத் திலோத்தமை தனைமணம் புரிந்து 
மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக்
கடைமுறை வெள்ளியங் கயிலையில் உற்றான் 
பரிவொடு இவ்விரதம் பாரகந் தன்னில் 
விரைகமழ் நறுந்தார் விக்ர மாதித்தன் 
மறிகடற் புவிபெற வருந்தி நோற்றிடுநாள் 
மற்றவன் காதல் மடவரல் ஒருத்தி 
இற்றிடும் இடையாள் இலக்கண சுந்தரி 
மெத்த அன்புடன் இவ் விரதம் நோற்பேனென 
அத்தந் தன்னில் அணியிழை செறித்துச்  630
சித்தம் மகிழ்ந்து சிலநாள் நோற்றபின் 
உற்ற நோன்பின் உறுதி மறந்து 
கட்டிய இழையைக் காரிகை அவிழ்த்து 
வற்றிய கொவ்வையின் மாடே போட  
ஆங்குஅது தழைத்தே அலருந் தளிருமாய்ப் 
பாங்குற ஓங்கிப் படர்வது கண்டு 
வேப்பஞ் சேரியிற் போய்ச் சிறையிருந்த 
பூப்பயில் குழல்சேர் பொற்றொடி யொருத்தி 
அவ்வியம் இல்லாள் அவ்விடந் தன்னிற் 
கொவ்வை அடகு கொய்வாள் குறுகி 640

இழையது கிடப்பக் கண்டுஅவள் எடுத்துக் 
குழைதவிழ் வரிவிழிக் கோதை கைக்கட்டி 
அப்பமோடு அடைக்காய் அவைபல வைத்துச் 
செப்ப முடனே திருந்திழை நோற்றிடக் 
கரிமுகத்து அண்ணல் கருணை கூர்ந்து 
பண்டையில் இரட்டி பதம் அவட்கு அருள 
கொண்டுபோய் அரசனுங் கோயிலுள் வைத்தான் 
விக்கிர மாதித்தன் விழிதுயில் கொள்ள 
உக்கிர மான உடைமணி கட்டித் 

தண்டையுஞ் சிலம்புத் தாளினின்று ஒலிப்பக்  650
கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன் 
மனமிகக் கலங்கு மன்னவன் தன்னிடங் 
கனவினில் வந்து காரண மாக 
இலக்கண சுந்தரி இம்மனை யிருக்கிற் 
கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத் 
துண்ணென வெழுந்து துணைவியை நோக்கிக் 
கண்ணுறக் கண்ட கனவின் காரணம் 
அண்ணல் உரைத்திடும் அவ்வழி தன்னில் 
ஆனை குதிரை அவைபல மடிவுற 
மாநகர் கேடுறும் வகையது கண்டு  660

இமைப் பொழுதுஇவள் இங்கு இருக்க லாகாதுஎன 
அயற் கடைஅவனும் அகற்றிய பின்னர் 
வணிகன் தனது மனைபுகுந்து இருப்ப 
மணியும் முத்தும் வலிய கல்லாய்விட 
அணியிழை தன்னை அவனும் அகற்ற 
உழவர் தம்மனையில் உற்றுஅவள் இருப்ப 
வளர்பயிர் அழிந்து வளம்பல குன்ற 
அயன்மனை அவரும் அகற்றிய பின்னர்க் 
குயவன் மனையிற் கோற்றொடி செல்லக் 
குயக்கலம் உடைந்து கொள்ளை போக  670

அயற்கடை அவனும் அகற்றிய பின்னர்த்
தூசுதூய்து ஆக்குந் தொழிலோர் மனைபுகத் 
தூசுக ளெல்லாந் துணிந்து வேறாகத் 
தூசரும் அவளைத் தூரஞ் செய்ய 
மாலைக் காரன் வளமனை புகலும் 
மாலை பாம்பாம் வகையது கண்டு 
ஞாலம் எல்லாம் நடுங்கவந்துஉதித்தாய் 
சாலவும் பாவிநீ தான்யார் என்ன
வெம்மனம் மிகவும் மேவி முனிவுறா 
அம்மனை அவனும் அகற்றிய பின்னர்  680

அவ்வை தன்மனை அவள்புகுந் திருப்ப 
அவ்வை செல்லும் அகங்கள் தோறும்
வைதனர் எறிந்தனர் மறியத் தள்ளினர் 
கைகொடு குத்தினர் கண்டோர் பழித்தனர்
அவ்வை மீண்டுதன் அகம் அதிற் சென்று 
இவ்வகைக் கன்னிநீ யாரென வினாவக் 
காத்தாண்டு உலகு கருணையோடு ஆண்ட 
மார்த்தாண்ட ராசன் மாமகள் ஒருத்தி
எல்லார்க்கும் மூத்தாள் இலக்கண சுந்தரி 
சொல்லு விக்கிரம சூரியன் மனையெனச்   690

சீர்கெட இருந்த தெரிவையை நோக்கி 
நீரது கொண்டு நிலம்மெழு கிடுகெனச்
சாணி யெடுக்கத் தையலுஞ் சென்றாள் 
சாணியும் உழுத்துத் தண்ணீர் வற்றிப் 
பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற 
மான்நேர் விழியாள் வருந்துதல் கண்டு 
தானே சென்று சாணி யெடுத்துத் 
தண்ணீர் கொணர்ந்து தரை மெழுக்கிட்டு 
மண்ணிய வீட்டில் மணிவிளக்கு ஏற்றிப் 
புத்தகம் எடுத்து வாவெனப் புகலப்  700 

புத்தகம் பாம்பாய்ப் பொருந்தி நின்றாட 
மெத்தஉள் நடுங்கி வீழ்ந்தவள் கிடப்பக் 
கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி 
அவ்வை தானே அகமதிற் சென்று 
புத்தக மெடுத்துப் பொருந்தப் பார்த்து 
வித்தக நம்பி விநாயக மூர்த்தி 
கற்பகப் பிள்ளைசெய் காரியம் இதுவென 
உத்தமி அவ்வை உணர்ந்து முன்அறிந்து 
தவநெறி பிழைத்த தையலை நோக்கி 
துவலரும் விநாயக நோன்பு நோற்றிடுகஎனக்  710

கரத்து மூஏழுஇழைக் காப்புக் கட்டி 
அப்பமும் அவலும் மாம் பல பண்டமுஞ்
செப்ப மதாகத் திருமுன் வைத்தே 
அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு 
மத்தகக் களிற்றின் மகா விரதத்தை 
வித்தக மாக வியங்குஇழை நோற்றுக் 
கற்பக நம்பி கருணை பெற்றதன்பின்
சக்கர வாள சைனி யத்தோடு 
விக்ர மாதித்தன் வேட்டையிற் சென்று 
தானுஞ் சேனையுந் தண்ணீர் விரும்பி  720

எவ்வகை செய்வோம் எனஉளம் மெலிந்தே 
அவ்வை தன்மனை அங்குஅவர் அணுக 
எய்துந் தாகமும் இளைப்புங் கண்டு 
செவ்வே அவற்றைத் தீர்க்க வெண்ணி 
இலக்கண சுந்தரி என்பவள் தன்னை 
அப்பமும் நீரும் அரசற்கு அருள்எனச் 
செப்பிய அன்னை திருமொழிப் படியே 
உண்நீர்க் கரகமும் ஒரு பணிகாரமும் 
பண்நேர் மொழியாள் பார்த்திபற்கு உதவ 
ஒப்பறு படையும் உயர்படை வேந்தனும்  730 

அப்பசி தீர அருந்திய பின்னர் 
ஆனை குதிரை அவைகளும் உண்டுந் 

தான்அது தொலையாத் தன்மையைக் கண்டே 
இவ்வகை சமைத்தநீ யாரென வினவ 
மவ்வல்அம் குழலாள் மௌனமாய் நிற்ப 
அவ்வை தான்சென்று அரசற்கு உரைப்பாள்
கணபதி நோன்பின் காரணங் காண்இது 
குணமுடை இவள்உன் குலமனை யாட்டி 
இலக்கண சுந்தரி என்றுஅவ்வை கூற 
மங்கையை நோக்கி மனம்மிக மகிழ்ந்து  740

திங்கள்நேர் வெள்ளிச் சிவிகையில் ஏற்றிக் 
கொண்டுஊர் புகுந்தான் கொற்ற வேந்தனும்
ஒண்தொடி யாரில் உயர்பதம் உதவினன் 
சிந்துர நுதலார் சென்றுஅடி பணியச் 
சுந்தரி இருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே! 745 
நூற்பயன்
பொன்னுமிகும் கல்விமிகும் புத்திரரோடு எப்பொருளும்
மன்னும் நவமணியும் வந்துஅணுகும் - உன்னி
ஒருக்கொம்பின் யானைமுக உத்தமனார் நோன்பின்
திருக்கதையைக் கேட்கச் சிறந்து.

பொற்பனைக்கை முக்கண் புகர்முகத்துப் பொன்மவுலிக்
கற்பகத்தின் நோன்பின் கதைதன்னைச் - சொற்பெருகக்
கற்றவரும் நோற்றவருங் காதலித்துக் கேட்டவரும்
பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு.

வெள்ளை எருதுஏறும் விரிசடையோன் பெற்றுஎடுத்த
பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி
நோற்றார் மிகவாழ்வார் நோலாது அருகுஇருந்து
கேட்டோர்க்கும் வாராது கேடு.

சூலிலார் நோற்கிற் சுதரை மிகப்பெறுவார்
காலமிகும் வெங்கலியார் தாம்நோற்கில் - மேலைப்
பிறப்புஎல்லாம் நல்ல பெருஞ்செல்வம் எய்திச்
சிறப்பிலே வாழ்வார் சிறந்து.

பிள்ளையார் கதை முற்றுப்பெற்றது.
திருச்சிற்றம்பலம்.